சேலத்தில் இசை உறவுகளின் சீரிய முயற்சியால் தோன்றிய "இணைவோம் இசைஞானியுடன்" குழுவின் நான்காவது ஆண்டுவிழாவிற்காக நான் சமர்ப்பிக்கும் கவி மடல். இசை உறவுகள் திரு.பிரவீன், டாக்டர் வெங்கட், திரு.ஸ்ரீதர், திரு.கார்த்திக்ராஜா, திரு.மணிகண்டன் மற்ற அனைவருக்கும் அன்பும், நன்றியும் வாழ்த்துக்களும்!!.
ஞாலத்தில் இசையிற் சிறந்த இசை, ஞானியின் புகழ் பாட ஒரே, தாளத்தில் உள்ளங்கள் ஒன்றிணைய, சேலத்தில் உதயமானது அன்று, இணைவோம் இசைஞானியுடன் என, அணையற்ற இசைவெள்ளமாய் பாடல், கணை தொடுக்கும் பாச்சாரதியைத் தொழ, இணையத்தில் பிறந்த இக்கு(ழு)ழந்தை
சங்கீ(தை)தம் உபதேசித்த கண்ணன், பண்ணைப்புரம் உதித்த பண்ணிசை மன்னன், வெண்ணை போல் ஸ்வரம் தாளம் விழுங்கி, விண்ணோரும் மகிழ பா விருந்தளித்தான், நட்சத்திரங்கள் மின்னிய இசைவானில், ஏழு ஸ்வரங்களும் குதிரையாய், தாளங்கள் கதிர் மயமாய் தேரில், நாளமெங்கும் இசையொளி பாய்ச்சும், ஞாயிறாய் உதித்தான் ஞானியான ராசைய்யன்
அவன் புகழ் மட்டும் பாட, அவனியெங்கும் அது சென்று சேர, தினம் தினம் கவிதை கட்டுரை என, மனம் நிறைந்து வாழ்த்துக் கூறி, ஆண்டுக்கொரு முறை கூடி, ஆன்ம சங்கமமாய் ஆனந்தக் கூத்தாடி, ஜென்மம் ஈடேற இசை இன்பம் தந்த, மன்னனை ராஜாதி ராஜ ராஜனை, அன்னை நிகர் பண்ணைப்புரத்தானை, விண்ணதிரக் கொண்டாடுவோம் என்றும், இணைவோம் இசைஞானியுடன் நன்றிப் பெருக்குடன்., பொன்னனைய இவ்வாய்ப்பை அமைத்த, கண்ணுக்குக் கண்ணான எம் தோழர்களே, பண்ணரசனைக் கொண்டாட மேடையமைத்த, அண்ணன் தம்பிகளே இனி எந்நாளும், பொன்னும் மணியும் நிறைக தம் இல்லங்களில்!!
இந்த இசை சந்திப்பு மிக இதமானது, இனிமையானது, சுகமானது.. இசை இசையோடு ஒன்றிய பயணம் நெடுந்தூரம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்
Copyright © 2020
Web Design by Sigma Computers, Salem